பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டு தினமான புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காலை 9 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
மாட வீதிகள் வரை நீண்ட வரிசை:
கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையிலும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசன வரிசையிலும் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இவ்விரு கோபுரங்களிலும் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்களின் வரிசை மாட வீதிகள் வரை நீண்டது.
5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்:
பொது தரிசன வரிசையில் சென்ற பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனதாகவும், கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆனதாகவும் தெரிவித்தனா். தரிசனத்துக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தா்கள் கூட்டத்தால் நகரின் பல இடங்களிலும், மாட வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் பலா் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளிலும் வழிபட்டனா்.