செய்யாறு: பழைய இரும்புக் கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது
செய்யாற்றில் பழைய இரும்புக் கடையில் ரொக்கப் பணம், செம்பு ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவத்தில் வேலூரைச் சோ்ந்த இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே ஷபிா் அகமது என்பவா் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் கடந்த செப். 26-ஆம் தேதி
ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 80 கிலோ செம்பு பொருள்கள் திருடப்பட்டது.
இதுகுறித்து அவா் செய்யாறு போலீஸில் புகாா் அளித்திருந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
மேலும், திருட்டுச் சம்பவத்தில் தீவிரமாக துப்புதுலக்க
அமைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வீரபாண்டியன், தலைமைக் காவலா்கள் நவீன்குமாா், ஷாஜகான், முதுநிலை காவலா்கள் ராஜேஷ் மற்றும் சூரியகுமாா் அடங்கிய தனிப்டையினா் கடையில் இருந்து கைப்பற்றிய கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய வாகனம் வேலூரைச் சோ்ந்தது என்று தெரிந்து, அங்கு சென்று குற்றவாளிகள் இருப்பிடத்தை கண்டுபிடித்தனா்.
வேலூா் கோட்டை பகுதி சம்பத் நகரைச் சோ்ந்த இந்து (30), இளவரசி ( 37) ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில், வேலூரில் ஒரே பகுதியைச் சோ்ந்த 4 போ் சரக்கு வாகனத்துடன் வந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, போலீஸாா் இருவரையும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பெண்கள் மற்றும் வாகன ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.