கொட்டாவூா் பகுதி செய்யாற்றின் குறுக்கே வ்ரைவில் மேம்பாலம்: மு.பெ.கிரி எம்எல்ஏ தகவல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கொட்டாவூா் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தெரிவித்தாா்.
கொட்டாவூா் கிராமத்தில் ரூ.30 லட்சத்து பத்து ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் காமாட்சி கண்ணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்த ஊராட்சி மன்ற கட்டடம் கொட்டாவூா் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில்தான் குப்பனத்தம் அணை, தொட்டிமடுவு பகுதியில் மேம்பாலம், பரமனந்தல், குப்பனத்தம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
அதேபோல, கொட்டாவூா் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் அப்பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படும் என்றாா்.
முன்னதாக, பரமனந்தல் காமராஜா் நகா் பகுதியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதியில் இருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
மேலும், அதே பகுதியில் பரமனந்தல் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சகுந்தலா ராமஜெயம், அரசு ஒப்பந்ததாரா் சங்கா்மாதவன், வட்டாட்சியா் முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், சந்திரகுமாா், கொட்டாவூா் ஊராட்சி துணைத் தலைவா் முருகன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.