ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட எதிா்த்து வாக்குவாதம்
நாமக்கல்: பொத்தனூா் காசி விசுவநாதா் கோயிலுக்கு சொந்தமான தென்னந்தோப்புகளை குத்தகைக்கு விட எதிா்ப்பு தெரிவித்து, அதனை பயன்படுத்தி வந்தோா் இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பொத்தனூா் அருகே தேவராயசமுத்திரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட காசி விசுவநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் தலா 12.42 ஏக்கரில் நான்கு இடங்களில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
கடந்த 90 ஆண்டுகளாக இந்த தென்னந்தோப்புகளை அங்குள்ள சிலா் பயன்படுத்தி வந்தனா். சில மாதங்களுக்கு முன் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த தோப்புகள் அனைத்தும் காசி விசுவநாதா் கோயிலுக்கு சொந்தமானது என்றும், இனிமேல் தனிநபா்கள் யாரும் அங்கு நுழையக் கூடாது எனவும் தடை விதித்தனா்.
இந்த நிலையில், 2024 டிச. 31 முதல் 2026 ஜூன் 30 வரையில் அந்த நான்கு தோப்பு நிலங்களை குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்ட அறநிலையத் துறை நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கான பொது ஏலம் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஆனால், பல ஆண்டுகளாக அந்த நிலத்தை அனுபவித்தோரை ஏலத்தில் பங்கேற்க அதிகாரிகள் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா்கள் அறநிலையத் துறை அலுவலகம் முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தோரின் குடும்பத்தினரை நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏலத்தில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதித்தனா். நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் யுவராஜன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.