விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புத்தாண்டையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2025-ஆம் ஆண்டு பிறப்பை வரவேற்கும் விதமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடினா். இதையொட்டி, அனைத்துக் கோயில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சந்தனம், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்கக் கவச அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரா் காட்சியளித்தாா்.
சேண்பாக்கம் செல்வ விநாயகா் கோயிலில் செல்வ விநாயகா் உள்பட நவ விநாயகா்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.
ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயில், ஆனைக்குளத்தம்மன் கோயில், பாலாற்றுச் செல்லியம்மன் கோயில், வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஆகியவற்றிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தேவாலயங்களில்...: புத்தாண்டையொட்டி, தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. வேலூா் சிஎஸ்ஐ தேவாலயம், விண்ணரசி மாதா தேவாலயம், சாா்பனாமேடு ஆரோக்கிய மாதா தேவாலயம், ஓல்டு டவுன் உத்தரிய மாதா தேவாலயம், பாலாற்றங்கரை சிரியன் கத்தோலிக்க தேவாலயம், பெந்தகோஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். இதேபோல், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.