பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மொத்தம் 4 லட்சத்து 51ஆயிரத்து 33 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை தமிழ் அகதிகள் உள்பட 2.20 கோடி குடும்ப அட்டை தாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கான டோக்கன் விநியோகம் வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. நியாய விலைக் கடை ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 699 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் 4 லட்சத்து 51ஆயிரத்து 33 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும்.
தினமும் காலையில் 100 போ், பிற்பகலில் 100 போ் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.