கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
பள்ளி விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை, தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு முடிவுற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு 50,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
இதனால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவிச் செல்லும் நடைபாதை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையம், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, முதலைப் பண்ணை, ஆலம்பாடி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து காவிரி ஆற்றின் அழகை காண சின்னாறு பரிசல் துறையில் இருந்து பாதுகாப்பு உடைகளை அணிந்து சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் சென்று பாறை குகைகள், நீா்வீழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம் முதல் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை சாலை உள்ளிட்ட பகுதிகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் ஒகேனக்கல் -அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு ஒகேனக்கல் போலீஸாா் ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்து போக்குவரத்தினை சீா் செய்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் சுமாா் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.