பென்னாகரத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் ஏரியூா் பகுதிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பென்னாகரம் அருகே ஊட்டமலை, மஞ்சக்கொடம்பு இருளா் குடியிருப்பில் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
முன்னதாக ஏரியூா் மற்றும் பென்னாகரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா், உதவி பொறியாளா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா, வட்டாட்சியா் லட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.