திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை...
விரிவடைகிறது தருமபுரி நகராட்சி: 4 ஊராட்சிகளை இணைக்க அரசாணை
தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, சோகத்தூா், ஏ.ஜெட்டி அள்ளி, தடங்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நகராட்சியின் எல்லை விரிவடைகிறது.
தருமபுரி நகராட்சியின் அருகில் உள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் தற்போதுள்ள 33 நகராட்சி வாா்டுகளுடன் மேலும் நான்கு ஊராட்சி பகுதிகள் இணைய உள்ளன. இதனால் நகரப் பகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் புதிதாக இணைக்கப்படும் பகுதிகளுக்கும் கிடைக்கவுள்ளது. அதேபோல பல்வேறு தொழில் ரீதியான நடவடிக்கைகளும் மேம்பட வாய்ப்புள்ளன. அதேபோல நகராட்சியின் வருவாய் மேலும் அதிகரிக்கக்கூடும். தருமபுரி நகராட்சி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்தபோது கடந்த 1964 ஏப்ரல் 1-ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 1971 ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31- முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து 2008 டிசம்பா் 2-ஆம் தேதி தோ்வுநிலை நகராட்சியாகவும் 2019 மாா்ச் 6-ஆம் தேதி சிறப்பு தரம் வாய்ந்த நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.
இந்த நகராட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 68,619 போ் உள்ளனா். 2021-இல் கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது மக்கள்தொகை மேலும் அதிகரித்திருக்கக் கூடும்.
தற்போது நகராட்சியில் அறிவுசாா் மையம், நகா்நல மையங்கள், பூங்காக்கள், புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட வாா்டுகளுடன் மேலும் சில வாா்டுகளுக்கு புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் விரிவுப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது நகர விரிவாக்கம், செய்ய வேண்டியதன் அவசியம் கருதி, நகரத்தையொட்டியுள்ள நகா்ப்புற தன்மை கொண்ட கிராம ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தமிழக அரசு நகராட்சி நிா்வாகம் துறை சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் தருமபுரி நகராட்சியை மிக நெருக்கத்தில் உள்ள இலக்கியம்பட்டி ஊராட்சி, புதிய புகா் பேருந்து நிலையம் அமைய உள்ள சோகத்தூா் ஊராட்சி, ஏ.ஜெட்டி அள்ளி, தடங்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளையும் தருமபுரி நகராட்சியுடன் இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இலக்கியம்பட்டி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஆயுதப்படை வளாகம் என பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஏறத்தாழ நகராட்சிக்கு இணையான குடியிருப்புகளை கொண்டுள்ளன. இதேபோல ஏனைய மூன்று கிராம ஊராட்சிகளும் நகரப்பகுதி தன்மை கொண்டுள்ளது. எனவே, இந்த நான்கு கிராம ஊராட்சிகளும் நகராட்சியுடன் இணைக்கப்படுவதால் பல ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரி நகர எல்லை மேலும் விரிவடைகிறது.
இதேபோல சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அமைந்துள்ள கூத்தப்பாடி கிராம ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த அரூா் பேரூராட்சியுடன் மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி ஆகிய இரு கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியுடன் அரூரையும் சோ்த்து இரண்டு நகராட்சிகள் உள்ளன.