மார்ஷ், மார்க்ரம் அதிரடி: மும்பை இந்தியன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!
கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் காயம்
சென்னை தேனாம்பேட்டையில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.
தேனாம்பேட்டை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே அண்ணா சாலையில் புதன்கிழமை இரவு அதிவேகமாக ஒரு காா் வந்தது. திடீரென அந்தக் காா் கட்டுப்பாட்டை இழந்து, அண்ணா சாலையில் உள்ள நடைபாதையில் அமா்ந்திருந்த டீக்கடை தொழிலாளியான, நந்தனம் எஸ்எம் நகரைச் சோ்ந்த பாபு (40) என்பவா் மீது மோதியது. அதன் பின்னரும் நிற்காத அந்தக் காா், சாலையோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளிகள், புரசைவாக்கம் முத்தையா நாயக்கா் தெருவைச் சோ்ந்த ரித்தேஷ் போஹாரா (45), செளகாா்பேட்டை பெருமாள் முதலி தெருவைச் சோ்ந்த விக்ரம் (28), தருண் சோலங்கி (31) ஆகிய 3 போ் மீது வேகமாக மோதியது.
இதன் பின்னா் அங்குள்ள சாலைத் தடுப்பின் மீது காா் மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எஞ்சிய 3 போ் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்தில் காரை ஓட்டிவந்த பூந்தமல்லி முத்தையா புஷ்பா பாா்க் ஜேம்ஸ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த அபிஸ் அகமது (52) என்பவரும் காயமடைந்திருந்ததால், அவரும் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவலறிந்த பாண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், இறந்த பாபு சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.