கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண் கொலை: நிதி நிறுவன உரிமையாளா் கைது
வாலாஜாபேட்டை அருகே பெண் கொலை தொடா்பாக நிதி நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சோ்ந்த காமேஷ் (43), திருமணமாகாதவா். நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.
வாலாஜாபேட்டை அடுத்த இலங்கை அகதிகள் முகமை சோ்ந்தவா் சாந்தினி (42), இவரது கணவா் சங்கா் பாஷா, தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
இதற்கிடையே, அணைக்கட்டு பகுதியில் தனியாா் ஓட்டல் ஒன்றில் சாந்தினி வேலை செய்து வந்தாா். ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற காமேஷ் மற்றும் சாந்தினிக்கு இடையே நட்பு ஏற்பட்டது.
இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக வாலாஜா பொதிகை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். இந்தநிலையில் காமேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாா். அதேசமயம், சாந்தினி தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதற்காக அவரிடம் பணம் கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த காமேஷ் கத்தியால் சாந்தினியை வெட்டிக் கொன்று விட்டு, வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
வாலாஜா காவல் ஆய்வாளா் சாலமோன் ராஜா மற்றும் காவல் துறையினா் விரைந்து சென்று சாந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்கு பதிவு செய்து காமேஷ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.