சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!
கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்
கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். நிகழ்வில் அவர் பேசியதாவது,
கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய முஸ்லிம் பெண்களை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மாநில அரசு 2007இல் மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவியைத் தொடங்கியது. இந்த நிதியுதவியானது இப்போது மாதத்திற்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் சிறுவர் மற்றும் சிறுமிகளின் கல்வியை ஆதரிக்க அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2005-க்கு முன்பு மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக எந்தவித முன்னுரிமையும் வழங்கப்படாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முஸ்லிம் சமூகத்திற்காகப் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.
முன்னதாக இந்து-முஸ்லிம் மோதல்கள் அதிகமாக இருந்ததாகவும், இப்போது அத்தகைய மோதல்கள் எதுவும் இல்லை. அதேபோன்று மதரஸாக்களின் நிலை முன்பு மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. மதரஸா ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை. 2006-க்குப் பிறகு, மதரஸாக்கள் பதிவு செய்யப்பட்டு அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட்டன. தற்போது மதரஸா ஆசியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுகிறார்கள்.
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடங்க பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்து, முஸ்லிம், உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் உள்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் ஆரம்பத்திலிருந்து நாங்கள் பாடுபட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.