இந்த வார ராசிபலன் மார்ச் 25 முதல் மார்ச் 30 வரை #VikatanPhotoCards
கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மேற்பார்வையில் வளர்ந்துவரும் மகனை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
மகனின் விருப்பப்படி டிஸ்ட்னிலேன்ட் கேளிக்கை பூங்காவுக்கு 3 நாள்கள் பயணமாகச் சென்ற தாய், விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தபோது, மகனைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரிதா ராமராஜு (48) தனது கணவர் பிரகாஷ் ராமராஜுவுடன் கடந்த 2018ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று கலிஃபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
இவர்களுக்கு மகன் உள்ள நிலையில், அச்சிறுவனை வளர்க்கும் பொறுப்பை தனக்கு வழங்குமாறு நீதிமன்றத்தை நாடி தந்தை பெற்றுள்ளார். அடிக்கடி மகனை பார்த்துச் செல்வதற்கு மட்டும் தாய் சரிதாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே மகனை டிஸ்ட்னிலேன்ட் கேளிக்கை பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாக சான்டா அனா பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
மகனை கேளிக்கை பூங்காவுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு, விடுதி அறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் போதைப் பொருள் உட்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
போதைப்பொருள் உட்கொள்வதற்கு முன்பு, சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சரிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடத்தச் சிறுவனை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். டிஸ்ட்னிலேன்டில் வாங்கிய பரிசுப் பொருள்களுக்கு மத்தியில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பல மணி நேரத்துக்கு முன்பே சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், தந்தையிடம் சிறுவனை ஒப்படைக்க வேண்டிய நாளுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில், சரிதாவை காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலகில் மிகவும் பாதுகாப்பான இடமாக உணரப்படும் பெற்றோரின் கைகளாலேயே சிறுவன், கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு இடையிலான கோபத்தில், தங்கள் பொறுப்பு என்ன என்பதையே பெற்றோர்கள் மறந்துவிடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!