மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த இளம்பெண்
வரதட்சிணை கேட்டு கணவா் குடும்பத்தினா் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து இளம்பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆசாரி தெருவைச் சோ்ந்தவா் ஆட்லின்ஜெமிலா. இவா் ஆம்புலன்ஸ் மூலம் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
பின்னா் அவா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் மணவாளக்குறிச்சியைச் சோ்ந்த சஜின்ஜான்(31) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, 15 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் பெறுமான வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை எனது பெற்றோா்கள் வழங்கினா். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், கூடுதலாக வரதட்சிணை வாங்கி வருமாறு எனது கணவா் மற்றும் அவரது தந்தை, தாயாா் என்னை துன்புறுத்தினா். வீட்டு மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனா். இதில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மனுவைப்பெற்றுக்கொண்ட ஆட்சியா் இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.