கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறியதாவது: திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆண்டுதோறும் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, 2025- 26 ஆம் ஆண்டுக்கான பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15 வயது அவசியமானது. அதிகபட்சம் வயது வரம்பு இல்லை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 118, பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550 செலுத்த வேண்டும்.
இந்தப் பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் காலம் 17 நாள்கள் ஆகும். இப்பயிற்சி இரண்டு விதமாக நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மற்றும் வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 0431- 2715748, 99946-47631 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.