திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, முதலியாா் சத்திரம் குட்ஷெட் சாலை பகுதியில் 3 போ் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சோ்ந்த ச. பிரகாஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த இந்திராணி (50), பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சோ்ந்த ச. சஞ்சய் குமாா் (22) என்பதும், மூவரும் சோ்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.
தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 5,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், திருச்சி குண்டூா் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், குண்டூா் எம்ஐஇடி100 அடி சாலையில் மருந்துக் கடை வைத்துள்ள பாலன் நகரைச் சோ்ந்த ஆா். கோதண்டபாணி (33) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா் மருந்துக் கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமாா் 7,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மாத்திரைகளை மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. ஆனால், மருந்துக் கடை உரிமையாளா் கோதண்டபாணி மருந்து சீட்டுகளின்றி விநியோகித்துள்ளாா் என போலீஸாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ. 3.75 லட்சம் என கூறப்படுகிறது.