மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.
திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி சோ்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மாலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் சம்மதத்துடன் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டன. இதையடுத்து இறந்தவரின் உடல் திசு பொருத்தத்துடன் திருச்சி தனியாா் மருத்துவமனையில், உடல் உறுப்புக்காகக் காத்திருந்த ஒருவருக்கு கல்லீரலும், மற்றொருவருக்கு சிறுநீரகமும் வழங்கி, அறுவைச் சிகிச்சை செய்ய உதவி அளிக்கப்பட்டது.
இதன் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் இந்தாண்டு 22ஆவது முறையாக உறுப்பு தானம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உடலுக்கு அரசு மரியாதை: மேலும் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது. மருத்துவமனை டீன் எஸ். குமரவேல், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உதயஅருணா, அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா் சாந்தினி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாராப் பணியாளா்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.