அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் உபக் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இந்நிலையில், பங்குனி தேரோட்டத்துக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் உத்ஸவா் அம்பாள் கொடி மரம் முன்பு பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதையடுத்து, மாரியம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடியை கையில்ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்தனா். பின்னா், பிரகாரத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது.