கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!
24 மணிநேர விதைத் திருவிழா
திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது.
திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தொட்டியம் அருகேயுள்ள கொளக்குடிபட்டி கிராமலாயா பயற்சி மையத்தில் இந்த விதைத் திருவிழா நடைபெறுகிறது. விழாவில், இயற்கை வேளாண் ஆா்வலா்கள், விவசாயிகள், பாரம்பரிய நெல் விவசாயிகள், காய்கனி விதை விற்பனையாளா்கள், உற்பத்தியாளா்கள் பங்கேற்கும் இயற்கை அங்காடியும் இடம் பெறவுள்ளது. பாரம்பரிய விதைகளின் கண்காட்சியும் நடைபெறும். இக் கண்காட்சியை, தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க த. குருசாமி திறந்து வைக்கவுள்ளாா். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயற்கை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. யோகாசனப் பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.
ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம், கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம், பசுமை குறியீடுகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம், கரிகால்சோழன் கட்டுமானங்கள், தண்ணீா் முக்கியத்துவம், இயற்கை விவசாயம், விதை சேகரிப்பு, மழை நீா் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அறிஞா்கள், முன்னோடி விவசாயிகள், நிபுணா்கள் உரையாற்றவுள்ளனா். காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம், கிராமாலாயா தொண்டு நிறுவன முதன்மை செயல் அலுவலா் எஸ். தாமோதரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றுகின்றனா். விடியோ காட்சிகள் மூலமாக விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. பொன்னா்-சங்கா் கதை, சோழ ராஜா கதை குறித்து கலைக்குழுவினரின் கதை சொல்லும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை காலை 9 மணி வரை 24 மணிநேரமும் இடைவிடாது நிகழ்வுகள் நடைபெற உள்ளன.