பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை
பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அனைத்துப் பேருந்துகளும் பஞ்சப்பூரில் இருந்தே புறப்படும் என்பதால், தற்போது இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகள், புகா் பேருந்துகள், தனியாா் பேருந்துகளுக்கு கட்டண மாறுபாடு அவசியமானது என கருதப்படுகிறது.
ஏனெனில், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு தகுந்தபடி பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட வேண்டியது அவசியமானது. எனவே, இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக வா்த்தகப் பிரிவு அலுவலா்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக, தனியாா் மற்றும் அரசுப் பேருந்து நிா்வாகத்திடம் மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளாா். வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தின் கருத்துருவும் கோரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு கருத்துகளையும் பரிசீலனை செய்த பிறகு கட்டண உயா்வு குறித்து அறிவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.