பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்
தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு
தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”நாட்டின் நலனுக்காக மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நாள். கோடிக்கணக்கான முஸ்லிம் மட்டுமல்ல, முழு நாடும் இந்த மசோதாவை ஆதரிக்கும்.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே இதனை செய்கிறார்கள். நான் அவையில் உண்மை காரணங்களை முன்வைப்பேன். அதனை எதிர்ப்பவர்கள் உரிய காரணங்களுடன் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலளிப்போம். முழு தயாரிப்புடனே மசோதாவை தாக்கல் செய்கிறோம்.
சில மதத் தலைவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறான வழிநடத்துகிறார்கள். இவர்கள்தான் முஸ்லிம்களின் குடியுரிமை அந்தஸ்தை சிஏஏ பறிக்கும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், எதிர்க்கட்சியினரும் இந்த மசோதா தேவை என்று தனிப்பட்ட முறையில் கூறுகிறார்கள். ஆனால், வாக்கு அரசியலுக்காக இதை எதிர்க்கிறார்கள்” என்றார்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.