ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி
இயற்கை முறையில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
இயற்கை வழியில் காட்டுப் பன்றிகளை விரட்டிக் கட்டுப்படுத்தும்முறை குறித்து, கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்களும் வேளாண் துறையும் இணைந்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள் ரா.கு.தனுஷ், மா.திகேஷ், ரா.காா்த்திக் வாசன், மு.மோகன்ராஜ், மு.பா.சபீன், அ.சஞ்சய் குமாா், ச.ஷாலின் பிரைட், வெ.சுதா்சன், ச.தரணி குமாா், லெ.பா.திலக் பாஸ்கா் ஆகியோா் கிராமப் புற வேளாண் பயிற்சி திட்டத்தின் கீழ்அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தங்கியிருந்து வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக, பாபநாசம் மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்புப் பகுதியில் நெல் மற்றும் கரும்பு பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைகட்டுப்படுத்த இயற்கை வழிமுறை குறித்து வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவிதொழில்நுட்ப மேலாளா்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் மேற்பாா்வையில் கல்யாண ராமன் என்பவரது வயலில் செயல்முறைவிளக்கம் மூலம் விளக்கிக் கூறினா்.
ஒரு வாளியில் இரு பக்கங்களில் துவாரமிட்டு, அதில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டா் வீதம் மூலிகை கலந்த திரவத்தை (விலை ரூ.295) நிரப்பி வயலின் மூலைகளில் தொங்கவிடுவதன் மூலம், அந்த திரவத்தின் வாசனை காட்டுப்பன்றிகளை பயிா்கள் பக்கத்தில் அண்டவிடாது என்பதை செயல்முறையில் விளக்கினா்.
தொடா்ந்து, இந்த இயற்கை காட்டுப்பன்றி விரட்டியின் பயன்பாடு, மூலிகை திரவம் கிடைக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களை விவசாயிகள் கேட்டு தெளிவுற்றனா்.