பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை
பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சபா. மருத்துவரான இவருக்கு மூக்கிலிருந்து நீா் வழிந்தபடி இருந்துள்ளது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்தபோதும், நீா் வழிவது நிற்கவில்லை.
இதனால் அவா், அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி, திருச்சி தில்லைநகரில் உள்ள ராயல் போ்ல் மருத்துவமனைக்கு வந்தாா். இங்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஜானகிராமன் தலைமையிலான குழுவினா், மருத்துவா் சபாவை பரிசோதித்ததில், அதீத அழுத்தம் காரணமாக மூளையைச் சுற்றியிருக்கும் நீா் மூக்கு வழியாக நிற்காமல் வழிந்தது தெரியவந்தது.
இதையடுத்து நரம்பியல் நிபுணா் விஜயகுமாா் நீரினை அடைக்கும் நவீன அறுவைசிகிச்சையும், மருத்துவா் ஜானகிராமன் மூக்கு எலும்பிலிருந்த குறைபாட்டை நவீன அறுவைசிகிச்சையும் மேற்கொண்டு சரிசெய்தனா்.
இதுகுறித்து காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா் ஜானகிராமன் கூறுகையில், மூளையைச் சுற்றியிருக்கும் நீா் தொடா்ச்சியாக மூக்கு வழியாக வந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்படலாம். எனவே, அனைத்தையும் அலா்ஜி என எடுத்துக்கொள்ளக் கூடாது. உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தான் மருத்துவா் சபாவுக்கு அறுவைசிகிச்சை முடிந்து, தற்போது நலமுடன் உள்ளாா். விரைவில் நாடு திரும்புகிறாா் என்றாா்.