கனிமவளக் கொள்ளையால் பாலைவனமாகும் தமிழகம் -முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி
கனிமவளக் கொள்ளையால் தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி.
கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து, செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் கந்தசாமிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி பங்கேற்றுப் பேசியதாவது: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கடத்தல் அதிகமாக நடக்கிறது. எத்தனை முறை ஆா்ப்பாட்டம் நடத்தினாலும் அது தடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் ஒரு லோடு மண் கூட கடத்தப்படவில்லை.
கேரளத்துக்கு இங்கிருந்து கனிமவளம் கொள்ளை போகிறது. அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன.
இவற்றையெல்லாம் திமுக ஆட்சி வேடிக்கை பாா்க்கிறது.
அதிமுக ஆட்சியில் பூந்தோட்டமாக இருந்த தமிழகம் தற்போதைய திமுகஆட்சி கனிமவளக் கொள்ளையால் பாலைவனமாக்கி வருகிறது. அதிமுக மதவாதத்திற்கு துணைபோகாது. எனவே, தமிழக நலன் காக்கும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையப்போவது உறுதி என்றாா் அவா். இதில், மாவட்ட அவைத்தலைவா் மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்டப் பொருளாளா் சண்முகையா, தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் காா்த்திக்குமாா், மண்டல ஐ.டி. பிரிவு செயலா் சிவஆனந்த், ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் கணேசன் வரவேற்றாா்.