பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அ...
ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை: ஒருவா் பலி-2 போ் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றிஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நபா் உயிரிழந்தாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இவா்களுடன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசா்குளத்தைச் சோ்ந்த சங்கர பாண்டி மகன் சிவாஜி கணேசன் என்ற சைலு (32) என்பவா் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தாா். இவா் ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவாஜி கணேசன் என்ற சைலுவை சில திருநங்கைகள் ரத்த வெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் மற்றும் கடையம் போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனா். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மதுமிதா, மகாலெட்சுமி ஆகியோா் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாற விரும்புபவா்களுக்கு மருத்துவ உபகரணங்களின்றி, அறுவை சிகிச்சை செய்பவா்கள் எனவும், அவா்கள் சிவாஜி கணேசன் என்ற சைலுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அதிக ரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. மதுமிதா, மகாலெட்சுமி இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.