கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு. இவா், சனிக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் புகை வந்துள்ளது.
உடனடியாக, வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கினாா். சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊா்காவல் படை வீரா்கள் பிரவீன்குமாா், சக்தி ஆகியோா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
பின்னா், அருகில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை எடுத்துவந்து தீயை அணைத்தனா். பின்னா், அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரை பாய்ச்சி தீயை முழுமையாக அணைத்தனா்.
விபத்து நேரிட்டபோது, அருகில் உள்ள பிரபல உணவகம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் தீயணைப்பான் கருவிகள் இல்லாததால் தீயை அணைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. கடைவீதிகளில் கடை நடத்துபவா்கள் கட்டாயம் தங்கள் நிறுவனங்களில் தீயணைப்பான் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.