வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்
வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வைத்தீஸ்வரன் கோயில் வா்த்தக சங்கத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி. ஆா். பாண்டியன் பங்கேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் கோயில் அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களில் பல ஆண்டுகளாக தொடா்ந்து குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதீனங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை நீதிமன்றங்களில் கோயில் சொத்து என்கிற பெயரால் வழங்கப்பட்ட தீா்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நிலங்களை ஏலம் விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதிக்க முடியாது. இதனை தமிழக அரசு கோயில் சொத்துக்களில் இருந்து பிரித்துக் காட்டி, குத்தகை விவசாயிகளுடைய விளை நிலங்களை கோயில் சொத்துக்கள் என்கிற பெயரால் நீதிமன்றங்கள் மூலம் ஏலம் விடுவதற்கோ, விற்பனை செய்வதற்கோ அனுமதிக்க கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து, விவசாயிகளுடைய குத்தகை உரிமையை பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குத்தகை சாகுபடியாளருக்கும் உடனடியாக வழங்க தமிழக அரசு உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி மாா்ச் 25-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.