பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை
புதுதில்லி: தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. அப்படி வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயத்தப்படாது என்று வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்கள் மக்களவையில் 26 இடங்களை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயத்தப்படாது என்று கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1977 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 42 ஆவது திருத்தத்திலிருந்து எல்லை நிர்ணயம் என்பது மாநிலங்களின் கழுத்தில் தொங்கும் ஒரு வாள். தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்னை. 2026-க்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால், தென் மாநிலங்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்படும். அதுபோன்றதொரு அநீதியை இழைக்க விரும்பாவிட்டால், முந்தைய மறுசீரமைப்பை போல, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
தொகுதிகளை மறு நிர்ணயம் செய்வதன் மூலம் 'குறைக்கப்படக்கூடாது' மற்றும் 'உயர்த்துவது' ஆகிய இரண்டும் செய்யப்பட வேண்டும் என்றால், அதைச் செய்யக்கூடிய ஒரே வழி மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதுதான். அதனை எதிர்பார்த்து - திட்டமிட்டு தான் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களை அமர வைக்கும் வகையில் புத்திசாலித்தனமாக புதிய அறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அண்மையில் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டால், ஐந்து தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். வட இந்திய மாநிலங்களுக்கு கூடுதல் மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும்.
கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி?
அதேநேரத்தில் தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டாலும் அது பாதிப்புதான். தென் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போதைய 23.76 சதவிகிதத்தில் (129/543) இருந்து 14.53 சதவிகிதமாக (129/888) ஆக குறைந்துவிடும்.
அதாவது ஆந்திரத்தின் மக்களவைத் தொகுதி 42 இல் இருந்து 34 ஆகவும், தமிழகத்தில் 39 இல் இருந்து 31 ஆகவும், கா்நாடகத்தில் 28 இல் இருந்து 26 ஆகவும், கேரளத்தில் 20 இல் இருந்து 12 ஆகவும் குறையும். ஐந்து தென்மாநிலங்கள் 26 இடங்களை இழந்து 103 ஆகக் குறையும்.
இதனிடையே, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 80 இல் இருந்து 91 ஆகவும், பிகாரில் 40 இல் இருந்து 50 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 29 இல் இருந்து 33 ஆகவும் உயரும். தென் மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகை விகிதத்தை குறைத்துள்ளன. வட மாநிலங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை. இதை குறையாக கூறவில்லை. வட மாநிலங்கள் அவ்வாறு செய்வதற்கு இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும்.
நிலைமை் மோசமாக இருக்கும்
மக்களவையில் 129 உறுப்பினர்கள் இருக்கும்போதே, நமது குரல்கள் கேட்கப்படுவதில்லை. அது 103 ஆக குறைக்கப்படும்போது, நிலைமை மேலும் மோசமாக இருக்கக் கூடும். தற்போதயை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதை எதிர்க்கிறோம். அதேநேரத்தில், வேறு வழிகளை முன்வைத்தால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தெரிவித்துள்ள சிதம்பரம், தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.