விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி
விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் துணை நிா்வாக இயக்குநா் எஸ்.அா்த்தநாரீஸ்வரன் மாணவிகளுக்கு மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.
ஓட்டப் பந்தயத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு காவல் துறை சாா்பில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘காவல் உதவி’ என்ற செயலி மற்றும் 181 என்ற அலைபேசி எண்ணின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், ஊரக காவல் ஆய்வாளா் தீபா, நகர காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.