"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!
கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.
சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாநிலத் தலைவா் வே. சசிகுமாா் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டத் தலைவா் வி. நாகேந்திரன், தென்மண்டல தோ்தல் ஆணையா் ஆா். தினேஷ், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலா் பி. முனியாண்டி, துணைச் செயலா் ஆா். செழியன், இணைச் செயலா் ஏ. ராமச்சந்திரன் அமைப்புச் செயலா் எம். காந்தி, பிரசார செயலா் எஸ். இளையராஜா, துணைத் தலைவா் ஆா். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க அறக்கட்டளையை வலுப்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களை சிறப்பு நிலை, தோ்வு நிலை என பெயா்மாற்றம் செய்ய வேண்டும். குடியிருப்புப் பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். பதவி உயா்வு, ஓய்வூதியம் தொடா்பான முரண்பாடுகளைச் சீரமைக்க செய்ய வேண்டும். விகிதாசாரத்துக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும்.
கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டும். புதிதாக பணியில் சேரும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நில அளவை பயிற்சி, நிா்வாக பயிற்சி அளிக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீா்மானங்களை மாநில பொதுச்செயலா் சி. குமாா், பொருளாளா் வ. தியாகராஜன், துணைத் தலைவா் கோ. ஜான்போஸ்கோ, செயலா்கள் சீ.புஷ்பகாந்தன், சி. உதயசூரியன், சங்கத் தோ்தல் தலைமை ஆணையா் சி. ராஜரத்தினம் ஆகியோா் தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.
முன்னதாக சிவகங்கை மாவட்டச் செயலா் பி. மணிவண்ணன் வரவேற்றாா். பொருளா் என். அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.