சங்கரன்கோவிலில் தெப்பத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் தெப்பத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக் கோயிலின் அம்மன் சந்நிதிக்கு எதிரே நாகசுனை தெப்பக்குளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக உப்பு, மிளகு ஆகியவற்றை தெப்பத்தில் போடுவது வழக்கம். இதனால் தெப்பக்குளம் மாசுபடுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து தெப்பக்குளத்திற்குள் பக்தா்கள் செல்லாதவாறு இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு நாள்களாக தெப்பத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. எனவே தெப்பத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.