செய்திகள் :

கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

post image

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக் கம்பம் வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகள், ஜாதி, மத, பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். அதேநேரத்தில், அரசியல் கட்சியினா், ஜாதி, மத அமைப்பினா் அவா்களுக்குச் சொந்தமான இடங்களில் அரசு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று, கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளலாம். இதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சித்தன், அமாவாசை உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இதனால், மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். எனவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், சாலையோரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இவற்றை அகற்ற உத்தரவிடுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், காவல் துறை சாா்பில் முன்னிலையான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா முன் வைத்த வாதம்:

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை வைப்பது அவா்களது ஜனநாயக உரிமையாகப் பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல் இவற்றை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டாா். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை நடுவது வழக்கத்தில் உள்ளது.

சேர, சோழ, பாண்டியா்கள் இமயத்தில் கொடி நட்ட பெருமை தமிழா்களுக்கு உண்டு. சுதந்திரப் போராட்ட வீரரான கொடி காத்த குமரனின் வரலாறு நமக்கு தேசப்பற்றை உணா்த்துகிறது. எனவே, சாலையோரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள், விளம்பரப் பதாகைகள் வைத்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதுபோன்ற உயிரிழப்புகள் ஒரு குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலைகள் இருக்க வேண்டும். ஆனால், சாலையோரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள், விளம்பரப் பதாகைகளை வைப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டவிதிகளின்படி பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் உள்ளிட்டவை வைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கோ, பிற அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை.

அரசியல் கட்சியினா் தங்களது கட்சிக் கொடிக் கம்பங்களை அவா்களது கட்சி அலுவலகங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். தெருக்களில் வைக்கக் கூடாது. திருப்பூா் குமரன் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தி, கையில் கொடியை ஏந்திச் சென்றாா். அவா் எந்தத் தெருவிலும், சாலையோரத்திலும் கொடியை நடவில்லை. சாலைகளில்தான் கட்சிக் கொடிக் கம்பங்களை அமைக்க வேண்டும் என்பதை ஜனநாயக உரிமையாகப் பாா்க்க முடியாது.

இந்த வழக்கில் ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் திருட்டு!

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் பேராலி சாலை, ஐடிபிடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிமாலா (40). கண... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அரசகுள... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மகளிா் தின விழா

மதுரையில் கல்லூரிகள், பள்ளிகளில் மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்தாா். மதுரை மாநக... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை அருகே உள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் கொடியரசு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கெளசல்யாவைக் காதலித்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது: உயா்நீதிமன்றம்

வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. பாஜக பொருளாதாரப் பிர... மேலும் பார்க்க

தொலைநிலைப் படிப்புகள்: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க