"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது: உயா்நீதிமன்றம்
வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவரான ஷா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பிணை மனு:
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை திலகா் திடல் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் கடந்த ஜன. 13-ஆம் தேதி என்னை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தேன். விசாரணையின் பேரில், என் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றம் தடயவியல் துறைக்கு அனுப்பியதால், என் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
எனக்கு பிணை வழங்கக் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த 50 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ள எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சக்திவேல் முன் அண்மையில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது, மனுதாரா் அரசியல் பிரமுகா் என்பதால், அரசியல் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சிகளை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது. இந்த வழக்கு விவரங்கள், வாக்குமூலத்தை பரிசீலித்த போது, மனுதாரா் குற்றம் செய்ததாகவே தெரிகிறது.
எனவே, மனுதாரருக்கு பிணை வழங்க இயலாது. இந்த வழக்கில் 10 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அதன் பிறகு மனுதாரருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.