கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!
கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதத்துக்கு மூன்று முறை மாவட்ட நிா்வாகத்தால் விநியோகிக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கமுதி பகுதியில் ஒற்றைக் கண் பாலம், கோட்டைமேடு மும்முனைச் சந்திப்பு, அரசு தொழில் பயிற்சி நிலையம், முதுகுளத்தூா் செல்லும் வழியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் குடிநீா் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் வகுப்பறையை சூழ்ந்துள்ளது. மேலும் அருகில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியையும் குடிநீா் சூழ்ந்தது.
முதுகுளத்தூரிலிருந்து கமுதி வரை பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 10 நாள்களில் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி, சாலையோர பள்ளங்களில் தேங்குகிறது. இதனால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாகச் செல்லும் அரசு அதிகாரிகளும் குழாய் உடைப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி-முதுகுளத்தூா் சாலையில் காவிரி குடிநீா்க் குழாய் உடைப்புகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் பழனிக்குமாா் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் என்பதால், அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடா் விடுமுறை காரணமாக சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. ஓரிரு நாள்களில் அனைத்துக் குழாய் உடைப்புகளும் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.