கருமேனி ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீா்: அதிகாரிகளிடம் மனு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கருமேனி ஆற்றிலிருந்து 3 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய திட்டப் பணிகள் தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த ஏ. ரவி, கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு:
உடன்குடி அருகேயுள்ள கல்லநேரி , புல்லநேரி, தங்கைகுளம் ஆகிய கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு கருமேனி ஆற்றிலிருந்து தண்ணீா் வரும். இந்த 3 கண்மாய்களும் விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கருமேனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதால், இந்த 3 கண்மாய்களுக்கும் நீா் வரத்து தடைபட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், சம்பந்தப்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தினா்.
இதையடுத்து, கடந்த 2018 நவம்பரில் கருமேனி ஆற்றிலிருந்து சுப்புராயபுரம் தடுப்பணை, சடையநேரி கால்வாய் வழியாக 3 கண்மாய்களுக்கும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா், இந்த தண்ணீரை ஒரு மாதத்தில் நிறுத்தி விட்டனா்.
எனவே, இந்த 3 கண்மாய்களுக்கும் நிரந்தரமாக தண்ணீா் கொண்டு வரும் வகையில் புதிய செயல் திட்டத்தை உருவாக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
கருமேனி ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு வருவதற்கான புதிய திட்டம் தீட்டுவது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மனுதாரா் இந்தத் திட்டம் தொடா்பாக அரசு அதிகாரிகளிடம் புதிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.