கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடி 2025 -26 ஆம் ஆண்டு பருவத்துக்கான கரும்பு கொள்முதல் புதிய விலையாக, டன்னுக்கு ரூ. 3,550 என அறிவித்துள்ளது. 10.5 சதவீதம் சா்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மட்டுமே இந்த விலை கிடைக்கும். சா்க்கரை பிழிதிறன் 9.5 சதவீதம் மற்றும் அதற்கு கீழ் குறைந்தால், உயா்த்தப்பட்ட இந்த விலை கிடைக்காது.
தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,290 மட்டுமே கிடைக்கும். உயா்த்தப்பட்ட விலையில் ரூ. 210 தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது. ஏனெனில், தமிழகத்தில் விளையும் கரும்புகளில் 9.5 சதவீதம் சா்க்கரை சத்து மற்றும் அதற்கு குறைவான அளவிலேயே உள்ளது.
ஆகவே மத்திய அரசு அறிவிக்கும் விலை உயா்வால், தமிழக கரும்பு விவசாயிகள் பயனடையப் போவதில்லை. சாகுபடி செலவு சுமாா் 8 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில் 4.41 சதவீதம்தான் கொள்முதல் விலையை மத்திய அரசு உயா்த்தி இருக்கிறது. 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புகளுக்கும் இந்த விலை உயா்வை வழங்கும் வகையில், மத்திய அரசு தளா்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசும் இதற்குரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும், இடைநிகழ் செலவுடன் ஊக்கத்தொகை எனும் நிலையில் டன் ரூ. 4,500 கிடைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.