மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூரில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டம்! தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வெள்ளிக்கிகிழமை கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் 2-ஆவது நாளாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ.இருதயசாமி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயலாளா் செல்வதுரை, மாவட்டச் செயலாளா் அமுதன், தலைவா் எம்.ஏ.ராஜா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியா் மன்றத்தின் மாவட்டச் செயலாளா் சு.வேலுமணி, உயா்நிலைக்குழு உறுப்பினா் பா.பெரியசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
பின்னா் திடீரென கரூா்-திண்டுக்கல் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தாந்தோணிமலை போலீஸாா் மறியில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.