கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்!
சமீபத்தில் தென்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதன்மையானவர், நிர்வாகிகள் மட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது உங்கள் தொகுதியில்தான். இவ்வளவு அனுபவம் இருந்தும் தேர்தலில் ஏன் உங்களால் சரியாகச் செயல்பட முடியவில்லை?” எனக் கேட்டு அந்த மாவட்டத்தின் சீனியர் புள்ளியைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். மேலும் தொடர்ந்தவர், “தேர்தலில் இப்படி நடப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும். வரும் தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்தைப் பெற்றுத்தர வேண்டியது உங்கள் பொறுப்பு. இல்லையென்றால், கட்சிப் பதவி மட்டுமல்ல… நிர்வாகரீதியிலான பதவியையும் இழக்க நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்தாராம். இதனால் ஆடிப்போன சீனியர், ‘நிலைமையை எப்படிச் சமாளிப்பது, தலைமையை எப்படி கூல் செய்வது...’ எனத் தனக்கு நெருக்கமான சீனியர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்திவருவதாகச் சொல்கிறார்கள் அந்த மாவட்ட உடன்பிறப்புகள்!
அ.தி.மு.க-வில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பத்துப் பேர்கொண்ட கள ஆய்வுக்குழுவில், ஒவ்வொருவரும் எந்தெந்த மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர் என்பதை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “இந்தக் குழுவில் இருப்பவர்கள் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு, அதை டிசம்பர் முதல் வாரத்துக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
“இந்தக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், கட்சிப்பணியைச் செய்யாத, தி.மு.க-வுடன் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளைக் கண்டறிந்து அவர்களைக் களையெடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது கட்சித் தலைமை. இந்தக் குழுவின் பின்னணி குறித்துப் பேசுகிற எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள், `` `ஆய்வுக்குழு’ எனப் பெயரிட்டிருந்தாலும், உண்மையில் இந்தக் குழுவின் பணியே களையெடுப்பதுதான். எனவே, விரைவில் அ.தி.மு.க-வுக்குள் பல அதிரடிகள் அரங்கேறும்” என்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஆளுங்கட்சி மா.செ ஒருவர், ‘தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்’ என்ற கனவில் நீண்டகாலமாகக் காத்திருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்திலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து, “இனி தனக்கு அமைச்சர் பதவியே கிடைக்கப்போவதில்லை என்ற விரக்தியில், கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்துவருகிறார். அதுமட்டுமல்ல... தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்கான செயல்வீரர்கள், தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தாமல் சுணக்கம் காட்டுகிறார்” என்கிறார்கள் தலைநகர் உடன்பிறப்புகள். “ஏற்கெனவே அவர்மீது பல்வேறு புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இப்போது தேர்தல் பணிகளிலும் சுணக்கம் காட்டிவருவதால், அந்த மா.செ-மீது ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்” என்கிறார்கள் ஆளுங்கட்சி வட்டாரத்தில்.
போதைப்பொருளுக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையில், சில தினங்களுக்கு முன்பு துணை நடிகை மீனா என்பவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில், தன்னுடைய ஆண் நண்பர் மூலம் போதைப்பொருளை வாங்கி வந்து, அதை கோலிவுட் மற்றும் சின்னத்திரையின் முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு விற்றதாக ஒப்புக்கொண்டார் அவர். கூடவே, போதைப்பொருளை விற்பதற்கென பிரத்யேகமாக வாட்ஸ்அப் குரூப் ஒன்று தொடங்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்த போலீஸார், அந்தக் குரூப்பிலுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகளிடம் விசாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். இதை அறிந்து, அந்தத் துணை நடிகையிடம் போதைப்பொருள் வாங்கியவர்களெல்லாம் இப்போது கலக்கத்தில் இருக்கிறார்களாம்!
நில மோசடி விவகாரத்தில் சிக்கி வழக்கைச் சந்திப்பவர்களைக் குறிவைத்து, சமீபத்தில் சுமார் 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது ஆவடி மாநகர காவல்துறை. ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியமான புள்ளியை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து விசாரித்தால், “ஆவடி எல்லைக்குள், டபுள் டாக்குமென்ட் விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில்கூட, குற்றாலத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் பல கோடி ரூபாயை ஏமாற்றியிருக்கிறது அந்த மோசடிக் கும்பல். இது தொடர்பாக ஆவடி குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டபோது, மோசடியில் ஈடுபட்டவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி முக்கியப் புள்ளியின் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல ஆவடி காவல் எல்லைக்குள் பதிவாகும் நில மோசடிப் புகார்களிலெல்லாம் அந்த முக்கியப் புள்ளியின் பெயரைச் சொல்லித் தப்பிக்கும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், அவரை காவல்துறை நெருங்கவே இல்லையாம். அந்த ஒரு நபரைக் காப்பாற்றும் முயற்சி இப்படியே தொடர்ந்தால், கடைசியில் ஆளும் தரப்புக்குத்தான் இது பாதமாக முடியும்” என்கிறார்கள் காவல்துறை சீனியர் அதிகாரிகள்!