கல்லூரியில் பொதுக் கொள்கை உருவாக்கம் கருத்தரங்கு
வண்டலூா் பி.எஸ். அப்துா் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொதுக் கொள்கை உருவாக்கம் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ராணுவ உளவுத் துறை அதிகாரி எஸ்.ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் முதல் அமா்வில், சீனாவின் எண்ம தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் இந்தோ - பசிபிக் பிரதான சாலை மூலம் சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார, அரசியல் விளைவுகள் குறித்து டாடா கன்சல்டன்சி செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபா் பாதுகாப்புத் துறை தலைவா் விஜயகுமாா், சென்னை சீனா ஆராய்ச்சிப் படிப்பு மைய ஆய்வாளா்கள் அனுந்தரா ரங்கன், நவ்யா ஷ்யாம் ஆகியோா் விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கான பொதுக் கொள்கை உருவாக்கம் போட்டியில் நிலைத்த வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி அடிப்படையில் உருவாகும் கொள்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
இதில், மாநில கிராமத் துறை மேம்பாட்டுக் கழக இயக்குநா் சுஜாதா ஜேக்கப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.