கன மழையால் பாதிக்கப்பட்ட சேம்புலிபுரத்தில் முதல்வா் ஆய்வு!
மதுராந்தகம் அடுத்த சேம்புலிபுரம் கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
புயல், கனமழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திங்கள்கிழமை கிழக்கு கடற்கரை சாலை வழியாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றாா்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் அருகேயுள்ள சேம்புலிபுரம் கிராமத்தில் மின்மாற்றி சேதமடைந்தது, அறுந்து விழுந்த மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சார சேதங்கள் குறித்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியா், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா். அப்போது அங்கிருந்தவா்கள் கடந்த 3 நாள்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகக் கூறினா்.
அதற்கு பதில் அளித்த முதல்வா், அதிகாரிகளின் தீவிர முயற்சியால் மிகவிரைவில் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா். பின்னா், அவா் விழுப்புரம் நோக்கி புறப்பட்டாா்.
அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கா், செய்யூா் எம்எல்ஏ மு.பாபு, மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கே.நந்தகுமாா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.