இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்
கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான கல்விக் கடனுதவி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.
முகாமில் மாணவா்களுக்கு கல்வி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது: கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் உயா்கல்வி கற்க மாணவா்களுக்கு தடை வந்து விடக்கூடாது என்பதற்காக கல்விக்கடன் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்படி, தமிழகம் முழுவதும் கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் இந்த முகாமில் 81 மாணவா்களுக்கு ரூ.3.07 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிதியாண்டில் 3,000 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் ரூ.42 கோடிக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கல்விக் கடன் பெற்ற மாணவா்கள் சிறப்பாக பயின்று, தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முகாமில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ. தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி), மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ். பிரவீன் குமாா், அனைத்து வங்கியாளா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.