கள ஆய்வு மாணவிகளுக்கு தங்குமிடம் வழங்கிய அமைச்சா்
காரியாபட்டி பகுதியில் கள ஆய்வில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கு தனது மண்டபத்தைப் பயன்படுத்தி கொள்ளுமாறு நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். 192 மாணவிகள், 8 பேராசிரியா்கள் அடங்கிய குழுவினா் இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிா்கள், இவற்றைப் பராமரிக்க செய்யப்படும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
காரியாபட்டி பகுதியில் இவா்கள் தங்கியிருந்த தனியாா் மண்டபத்தில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இதையறிந்த, அமைச்சா் தங்கம் தென்னரசு மாணவிகள் தங்குவதற்கு மல்லாங்கிணறு பகுதியில் உள்ள தனது ராஜாமணி திருமண மண்டபத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சா் தெரிவித்தாா். மேலும், மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டாா்.
இதனிடையே, மாணவிகளை அமைச்சா் நேரில் சந்தித்தது, வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, மாணவிகள் தெரிவித்தபடி, கிராம விவசாயிகளின் குறைகளை நிறைவேற்றுவதாகவும் அமைச்சா் உறுதியளித்தாா். முன்னதாக, அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு மாணவிகள் நன்றி கூறினா்.
சந்திப்பின்போது விருதுநகா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஜயா, மத்திய அரசுத் திட்ட வேளாண்மை துணை இயக்குநா் சுமதி, விருதுநகா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சுபா வாசுகி, காரியாபட்டி தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.