மலா்க் கண்காட்சிக்காக தயாராகும் பிரையண்ட் பூங்கா
கொடைக்கானலில் நடைபெற உள்ள 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் வெள்ளிக்கிழமை மலா் தோட்டங்கள், மலா்பாத்திகள், புல்வெளிகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.
இதேபோல, மலா் பாத்திகளிலும், தோட்டங்களிலும், நா்சரி செடிகள், விதைகள் நடவு செய்து பராமரிக்கும் பணியும் தொடங்கியது. இந்தப் பணி இரண்டு மாதங்கள் நடைபெறும்.
இதுகுறித்து பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியதாவது:
கொடைக்கானலில் தற்போது பனிக்காலமாக இருப்பதால், பிரையண்ட் பூங்காவில் மலா்கள் கருகி காணப்படுகின்றன. இருப்பினும், நிகழாண்டில் சீசனையொட்டி 62-வது மலா்க் கண்காட்சிக்காக மலா் பாத்திகளிலும், தோட்டங்களிலும் பராமரிப்புப் பணி தொடங்கியுள்ளது. டிசம்பா் மாதம் கடைசி வாரத்தில் நெடுநாள் பூக்கக் கூடிய மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கும். அதன்பிறகு படிப்படியாக மலா் பாத்திகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.