பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக, பாலாறு பொருந்தலாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அணையிலிருந்து பாசனப் பகுதிக்கு பழனி சாா் ஆட்சியா் கிஷன்குமாா் வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்து விட்டாா். அப்போது, வட்டாட்சியா் பிரசன்னா உடனிருந்தாா்.
இந்த நிலையில், அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 1,464 மில்லியன் கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், ரவிமங்களம், மானூா், கோரிக்கடவு, கீரனூா், அ.கலையமுத்துா் பாலசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 7,012 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.