ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம்!
கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அலுவலகம் தன்னை எப்படி நடத்தியதோ அதற்கேற்ற கடிதத்தில் ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளதாக அக்கடிதத்தில் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஞ்சலா யேஹோ என்ற பெண் (தனியார் நிறுவன இயக்குநர்), தனது ராஜிநாமா கடிதத்தை லிங்க்ட்இன் வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் ராஜிநாமா செய்வதாக எழுதியுள்ள அக்கடிதத்தில், ''இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதைக் குறிப்பிடும் விதமாகவே இத்தகைய காகிதத்தில் ராஜிநாமா கடிதத்தை எழுதுகிறேன். நான் ராஜிநாமா செய்கிறேன்'' என எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து இணையப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் புகைப்படம், வேலையிடத்தில் பணியாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
புகைப்படத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,
’பணியிடத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை நன்னடத்தையுடன் அணுகுங்கள். உண்மையாகப் பாராட்டுங்கள். அவர்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் சூழல் ஏற்பட்டாலும், நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மனக்கசப்புடன் அல்ல.
வெளிப்படையாகப் பாராட்டுவது அவர்களை தக்கவைத்துக்கொள்ளும் கருவி மட்டும் அல்ல; அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் அல்ல; எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதற்காகவும் அது அமையும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
அங்கீகாரம் கொடுக்காமல் உழைப்பை மட்டும் பிழியும் நிறுவனத்திற்கு, கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா செய்துவிட்டு வந்த அப்பெண்மணியை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | சொல்வதெல்லாம் சர்ச்சை.. உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாகும் நீதிமன்றம்!