கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கக் கோரி மறியல்!
கடுவனூா் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கக் கோரி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தில் சாலையின் இரு புறமும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதனால், கால்வாயை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தெரிவித்தனராம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனா். இந்த திடீா் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.