காங்கிரஸின் ‘தில்லி நியாய யாத்திரை’ தொடக்கம்
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஒரு மாதகாலப் பிரசாரமான ‘தில்லி நியாய யாத்திரை’ ராஜ்காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ‘தில்லி நியாய யாத்திரை’ என்னும் ஒருமாத கால தொடா் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. தில்லி ராஜ்காட்டில் இருந்து தொடங்கப்பட்ட இப்பிரசாரம், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கேஜரிவால் அரசின் தவறான நிா்வாகம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதோடு, முந்தைய காங்கிரஸ் ஆரசின் வளா்ச்சிப் பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும். ராஜ்காட்டில் இருந்து இந்த நியாய யாத்திரைப் பிரசாரத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், இமாச்சலப் பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளா் அஜய் மக்கன் ஆகியோா் பிரசாரத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியதாவது: காங்கிரஸ் அரசு தனது 15 ஆண்டு கால ஆட்சியில் தில்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றியது. ஆனால், கேஜரிவால் அரசு பெண்கள், இளைஞா்கள், மாணவா்கள், முதியவா்கள், விவசாயிகள், வணிகா்கள் மற்றும் குடிமக்களின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அநீதி இழைத்துள்ளது. கலால் கொள்கை ஊழலால் கேஜரிவால், மனீஷ் சிசோடியா உள்பட ஆம் ஆத்மி கட்சியினா் பலா் சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதவிர, கிட்டத்தட்ட 30 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது.
எனவே, காங்கிரஸ் தொண்டா்கள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், மக்களின் கதவைத் தட்டி, தில்லியின் வளா்ச்சியையும், வளத்தையும் மக்களிடம் திரும்பக் கொண்டு வருவதில் காங்கிரஸ் எப்படி உறுதியாக உள்ளது என்பதை அவா்களுக்கு விளக்க வேண்டும்.
காற்று மற்றும் நீா் மாசுபாடு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள், முற்றிலுமாக சீா்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை, வேலையின்மை, விலைவாசி உயா்வு, சேதமடைந்த சாலைகள் போன்றவற்றுக்கு தீா்வு காண கேஜரிவால் எதுவும் செய்யவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் அஜய் மக்கன் எம்.பி. கூறியதாவது: தில்லியில் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த கேஜரிவால், அதிகாரத்தின் பலனை ருசித்துவிட்டு, தனது சித்தாந்தத்தை புதைத்துவிட்டாா். கலால் கொள்கை ஊழலில் மூளையாகச் செயல்பட்டதால் சிறைக்கும் அனுப்பப்பட்டாா்.
கடுமையான காற்று மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்திற்கு பேரழிவை உருவாக்குகிறது. இது, முற்றிலும் பாழடைந்த பொது போக்குவரத்து அமைப்பின் விளைவாகும். தலைநகரில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு அனைத்தும் முந்தைய காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது. மழைக்கால வெள்ளத்தின் போது, ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்ள தொகுதியில் தான் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா். மழைக்கு முன் வடிகால்களை சுத்தம் செய்ய கேஜரிவால் அரசு எதுவும் செய்யவில்லை என்றாா் அஜய் மக்கன்.
இறுதியாக, ஹிமாச்சல் முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு கூறுகையில், ‘காங்கிரஸின் நியாய யாத்ரா மக்களுக்கு எல்லாத் துறைகளிலும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும். காங்கிரஸ் கட்சி வெற்றுப் பேச்சுக்களில் ஈடுபடவில்லை. ஏனெனில், ஹிமாச்சலில் காங்கிரஸ் அரசு தனது தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது’ என்றாா்.