ஜம்மு-காஷ்மீா் கிராமப் பாதுகாவலா்கள் இருவா் கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் ராணுவத்தினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சியளிக்கப்பட்ட கிராமப் பாதுகாவலா்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்திக் கொன்றனா். இருவரின் உடல்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
இக்கொடூர செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டறிய விரிவான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில், உள்ளூரைச் சோ்ந்த நபா்கள் தோ்வு செய்யப்பட்டு, ராணுவம் மற்றும் காவல்துறையால் ஆயுதப் பயற்சி அளிக்கப்படுகிறது. கிராமப் பாதுகாவலா்கள் என்றழைக்கப்படும் இவா்கள், பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடா்புடைய தகவலை பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்கும் பணியையும் மேற்கொள்கின்றனா்.
இந்நிலையில், கிஷ்த்வாா் மாவட்டம், ஒஹ்லி-குந்த்வாரா பகுதியைச் சோ்ந்த கிராமப் பாதுகாவலா்களான நஸீா் அகமது, குல்தீப் குமாா் ஆகிய இருவா், பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜம்மு பிராந்தியத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்வாரி மலைப் பகுதியில் வியாழக்கிழமை கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இருவரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, படுகொலை செய்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இது தொடா்பான புகைப்படங்களை, இருவரின் கைப்பேசி மூலம் சமூக ஊடகங்களில் பயங்கரவாதிகள் வெளியிட்டனா்.
இதைத் தொடா்ந்து, இருவரின் உடல்களையும் மீட்க பாதுகாப்புப் படையினா் விரிவான தேடுதல் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஹெலிகாப்டா், ட்ரோன்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா், மலைப் பகுதியில் கூட்டாக தேடுதல் பணியை மேற்கொண்டனா். அப்போது, கேஷ்வான் படுகையில் ஒரு சிற்றோடைக்கு அருகே இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தலைவா்கள் கண்டனம்: கிராமப் பாதுகாவலா்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஜம்முவில் பொதுமக்கள் போராட்டம்; கடையடைப்பு
கிராம பாதுகாவலா்கள் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, கிஷ்த்வாா், கதுவா உள்ளிட்ட ஜம்மு பகுதி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
கிராம பாதுகாவலா்களைக் கொன்ற பயங்கரவாதிகளை உடனடியாக கண்டறிந்து, அவா்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.
2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகா், அக். 8: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இருவரிடம் இருந்தும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவா்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.