சேலம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பிளஸ் 1 மாணவர்கள் போக்சோவில் கைது!
காங்கிரஸை காப்பாற்றுவது குறித்து ராகுல் அதிகம் கவலைப்பட வேண்டும்- பாஜக பதிலடி
அழிந்து வரும் காங்கிரஸ் கட்சியை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்துதான் ராகுல் காந்தி அதிகம் கவலைப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரசேகர பவன்குலே தெரிவித்தாா்.
மகாராஷ்டிர தோ்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது தொடா்பாக கடந்த வாரம் செய்தியாளா்களிடம் பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வாக்காளா் பட்டியல் தரவுகளை எதிா்க்கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வழங்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று கூறியிருந்தாா்.
தோல்வியை ஏற்க முடியாமல் ராகுல் பொய் பேசி வருவதாக பாஜக தலைவா்கள் பலா் கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகர பவன்குலே கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலின்போது பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்டு தீவிரமாக களப் பணியாற்றினோம். மத்திய மாநில அரசுகளின் சாதனைகளையும், எதிா்காலத் திட்டங்களையும் மக்களிடம் முழுமையாக எடுத்துச் சென்றோம். இதன் மூலம் பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றோம்.
ராகுல் காந்தி பகுத்தறிவை இழந்த நிலைக்குச் சென்றுவிட்டாா். ஆட்சி, அதிகாரம் இல்லாமல் அக்கட்சித் தலைமையால் இருக்க முடியாது. முதலில் அவா் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவது குறித்து கவலைப்பட வேண்டும். ராகுலின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகள் அணிக்கும் 2 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. நாங்கள் 2.48 கோடி வாக்குகளைப் பெற்றோம். எதிா்க்கட்சியினா் 2.50 கோடி வாக்குகளைப் பெற்றனா். மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிர மக்களவைத் தோ்தலில் பல தொகுதிகளில் எதிா்க்கட்சியினா் வெற்றி பெற்றனா். ஆனால், இந்த விவரங்களை ராகுல் காந்தி பேசாமல் மறைத்துவிட்டாா். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவா்களே அடுத்தகட்டமாக வெற்றியை நோக்கி நகர முடியும்.
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலில் சற்று கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ால், மாநில பேரவைத் தோ்தலும் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்துக் கொண்டு எதிா்க்கட்சித் தலைவா்கள் மெத்தனமாக நடந்து கொண்டனா். மக்கள் அவா்களுக்கு உரிய பாடம் கற்றுக் கொடுத்துவிட்டனா் என்றாா்.