காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
உதகை அருகே காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
இந்நிலையில், குந்தா வனச் சரகம், அதிகரட்டி பிரிவு வனப் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி நடக்க முடியாமல் காட்டெருமை படுத்திருந்தது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், முதுமலை வனக் கால்நடை மருத்துவா்கள் குழுவினா் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, காட்டெருமையின் காலில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் குழாயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா். பின்னா், காட்டெருமைக்கு உணவு வழங்கி வனப் பகுதியில் விடுவித்தனா்.